Going to Trekking with the Dupakur officer and the collector collector Look at the trend of Tamil Nadu

முன்னாடியெல்லாம் விருதுநகர் அப்படிங்கிற ஊரை நினைச்சா வெச்சு வெளுக்கிற வெயில் நியாபகத்துக்கு வரும், இல்லேன்னா தீப்பெட்டி நியாபகத்துக்கு வரும். ஆனா இப்பவோ கல்லூரி மாணவிகளை கலாபத்துக்கு இழுத்த நிர்மலா அக்கா (!?)தான் நியாபகத்துக்கு வர்றாங்க. ஆனா அவங்களை பின்னுக்கு தள்ளி இப்போ ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிச்சுட்டாரு அந்த மாவட்டத்து கலெக்டர் சிவஞானம்.

என்னது கலெக்டருமா?....என்று கோக்குமாக்காக யோசிக்காதீங்க. இது வேற விவகாரம்.

விருதுநகர்ல சமீபத்துல போலி சப் கலெக்டர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணி, வெள்ளாவியில வைக்காமலே வெளுத்தெடுத்திருக்குது போலீஸ். காவல்துறைக்கு அந்தாளு மேலே காட்டம்னா காட்டம் அந்தளவுக்கு காட்டம்.

அப்படியென்ன பெரிய பாவத்த பண்ணிட்டார் அந்தாளு? என்கிறீர்களா! பின்னே, கலெக்டரையே ஏமாத்தி காரியம் சாதிச்சவனை பின்னி எடுக்காம, புரோட்டா கொடுத்தா விசாரிப்பாங்க.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம். சுமார் ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த மாவட்ட கலெக்டரான சிவஞானத்தை சந்திச்சஇவரு,கலெக்டர் கையில ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து, தன்னை ‘திருவள்ளூர் ஆர்.டி.ஓ.’ என்று அறிமுகப்பட்டுத்தியிருக்கிறார். கலெக்டரும் இந்தாளு சொன்னதை அப்படியே நம்பி அவருக்கு கை கொடுத்து, கையோட காஃபியும் கொடுக்க சொல்லியிருக்கார்.

அப்புறம் அடிக்கடி கலெக்டரை இவரு சந்திக்கிறது தொடர்ந்துச்சு. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி விருதுநகர் கலெக்டரேட்ல பெரிய வஸ்தாதுவா வலம் வர ஆரம்பிச்சிருக்கர் நம்ம சி.சு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னோட அப்பா சேதுராமனின் செங்கள் சூளைக்கு செம்மன் குவாரிக்கு அனுமதி வாங்கி கொடுத்திருக்கார்.

இந்த நிலையில போன மாசம் ஏப்ரல் 24-ம் தேதியன்னைக்கு சேதுராமனோட குவாரி டிராக்டர்களை, விதிமுறைகளை மீறி அதிகமா மண் அள்ளுனதாக மடக்கினர் கனிமவள அதிகாரிகள். இது சி.சு.வின் காதுகளுக்கு போக உடனே அந்த அதிகாரிகளுக்கு போன் போட்டு ‘நான் யார் தெரியுமாய்யா? திருவள்ளூர் ஆர்.டி.ஓ. என் வீட்டு டிராக்டர் மேலேயே கை வெச்சுட்டியா.

இரு உன்ன என்ன பண்றேன்னு!’ என்று கொதித்தவர், கையோடு தன் கலெக்டர் நண்பர் சிவஞானத்துக்கு விஷயத்தை சொல்லியதோடு ‘டிராக்டரை பறித்த அதிகாரி குடிபோதையில் இருந்தார், லஞ்சம் கேட்டார்’ என்று பிட்டுக்களை அள்ளிப் போட்டிருக்கிறார். டென்ஷனான கலெக்டர் என்னா, ஏதுன்னு விசாரிக்காமல் சம்பந்தப்பட்ட அலுவலகர்களுக்கு டிரான்ஸ்பர் சார்ஜ் மெமோ கொடுத்து அதிரடி செய்துவிட்டார்.

இதில் வருவாய்த்துறை சங்கத்தினர் டென்ஷனாகினர். அப்போதுதான் யார் இந்த சிவசுப்ரமணியன்? திருவள்ளூர்ல ஆர்.டி.ஓ.வா இருக்கிறவரு ஏன் நம்ம மாவட்ட விஷயத்துல மூக்கை நுழைக்கிறார்? என்று விசாரிக்க துவங்கியுள்ளனர். அப்புறம்தான் தெரிந்திருக்கிறது திருவள்ளூரில் இருப்பது பெண் ஆர்.டி.ஓ.தான் என்றும் 2014க்கு பிறகு அந்த ஊருக்கு ஆண் ஆர்.டி.ஓ.வே வரவில்லை என்பதும் தெளிவாகியிருக்கிறது. அதிர்ந்து போன வருவாய் துறை அதிகாரிகள் அரசு இணையதளத்திலும் இதை கிராஸ் செக் செய்தனர். அது உண்மை என்றே தெரிந்தது.

அதன் பிறகுதான் நம்ம டுபாக்கூர் மாப்பிள்ளைக்கு விருந்து தயார் செய்தனர். ’உங்க டிராக்டரை பிடித்த அலுவலர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்போறோம். அதை நீங்களே நேர்ல வந்து பாருங்க.’ என்று அழைத்தனர். சி.சு.வும் துள்ளிக் குதித்து வந்திருக்கிறார். அவரை ஒரு அறையில் உட்கார வைத்தவர்கள், ‘யாருல நீ?’ என்று கேட்க, முதலில் எகிறியிருக்கிறார்.

அப்புறம் தோண்டித் துருவியபோது தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி குரூப் - 1 தேர்வு எழுதியதாகவும், அதுல பெயில் ஆனதாலே இப்படி ஆர்.டி.ஓ.ன்னு பொய் சொல்லிட்டு திரியுறதாகவும் சொல்லியிருக்கார். ஆனால் உண்மையில் சிவசுப்பிரமணியன் ஒரு பி.இ. பட்டதாரியாம். அப்புறம் அதிகாரிகள் போலீஸுக்கு தகவல் தர, அவர்களும் வந்து அள்ளிக் கொண்டு போய்விட்டனர்.

இதுல ஒரு கொடுமை என்னன்னா டுபாக்கூர் ஆர்.டி.ஓ.வை நம்பி பழகிய கலெக்டர் சிவஞானம், சில நாட்களுக்கு முன் தன் மாவட்ட அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சதுரகிரி மலைக்கு ஜாலி டிரெக்கிங் போயுள்ளார். அப்போது தன் நண்பரான சிவசுப்பிரமணியனையும் அழைத்துச் சென்றுள்ளார். அரசு செலவில் இந்த டுபாக்கூரும் சதுரகிரியில் ஜாலியடித்துவிட்டு வந்திருக்கிறார்! என்பதுதான். இதைச்சொல்லித்தான் விருதுநகர் மாவட்ட அரசு அதிகாரிகள் சிரிசிரியென சிரிக்கிறார்கள்.
இனியாச்சும் கலெக்டருங்க அலர்ட்டா இருந்துக்குங்க பாஸ்!