சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.15 கோடி கோகைன் எனப்படும் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து மிகப் பெரிய அளவில் போதை பொருட்கள் சென்னைக்கு வரும் விமானத்தில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான பயணிகளை அவர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். இந்நிலையில் ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்தவர்களில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரின் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் புத்தகத்தின் நடுபகுதியை மட்டும் வெட்டி, அதில் பாலிதீன் பையில் அடைக்கப்பட்ட கோகைன் போதைப்பவுடர் வைத்திருந்தனர். 3 கிலோ எடை கொண்ட அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி. இதையடுத்து அந்த 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.