Asianet News TamilAsianet News Tamil

காவிரிக்காக தமிழகம் - கர்நாடகம் உறவுகள் பாதிக்க கூடாது - கர்நாடாக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுரை..

gk vasan advises karnataka government to not affect tamilnadu and Karnataka relation for cauveri
gk vasan advises karnataka government to not affect tamilnadu and  Karnataka relation for cauveri
Author
First Published Apr 7, 2018, 12:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


திருச்சி 

காவிரி விவகாரத்தால் இரு மாநில உறவுகள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்று ஜி.கே.வாசன் அறிவுரை வழங்கியுள்ளார். 

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். 

இதற்காக திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கியது. 

இதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஞானதேசிகன், மாவட்ட தலைவர்கள் நந்தாசெந்தில்வேல், குணா, ரவீந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ரவிக்குமார் 

மற்றும் விவசாய சங்க தலைவர்கள் ஐயாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், புலியூர் நாகராஜன், மன்னார்குடி ரங்கநாதன், விசுவநாதன், மகாதானபுரம் ராஜாராம், தீட்சிதர் பாலசுப்பிரமணியன் மற்றும் தொழிலதிபர்கள் தர்மராஜ், வெங்கடேசன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

உண்ணாவிரத பந்தலில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம், "காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைப்பதை தடுப்பதற்கும், நியாயம், சட்டம், கூட்டாட்சி இவைகளை மிதிக்கும் வகையிலும், மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் செயல்பட்டு வருகின்றன.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்காத அரசாக தமிழக அரசு உள்ளது. 

இது அரசியல் பிரச்சனை அல்ல. விவசாயிகளின் பிரச்சனை, மக்களின் பிரச்சனை. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் காவிரி நீரை பயன்படுத்துகிறார்கள். 

கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரசு அரசும் கொல்லைப்புறமாக ஒன்று சேர்ந்து தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதை ஏற்க முடியாது.

இந்த நிலையில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளார்கள். 

காவிரி பிரச்சனைக்காக எந்தெந்த கட்சிகள் உணர்வுபூர்வமாக போராடுகின்றன. யார், யாரெல்லாம் உதட்டளவில் மட்டும் பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். 

கன்னட அமைப்பினர் ரஜினி, கமல் திரைப்படங்களை கர்நாடகாவில் அனுமதிக்கமாட்டோம் என்றும், அவர்களை கர்நாடகாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றும் கூறுவது கண்டனத்துக்கு உரியது.

ஒவ்வொரு மாநிலத்தில் இருப்பவர்கள் அந்த மாநிலத்துக்காக குரல் கொடுப்பது சகஜம். இது சட்டப் பிரச்சனை. தனிப்பட்ட பிரச்சனை அல்ல. காவிரி விவகாரத்தால் இரு மாநில உறவுகள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கர்நாடக அரசின் கடமை. 

கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக இருந்து வருகிறார்கள். இந்த உறவு தொடர வேண்டும். இதில் அரசியலை புகுத்தி தனிப்பட்டவர்களை தாக்குவது ஏற்புடையது அல்ல" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios