தூத்துக்குடியில், தீபாவளிக்கு முன்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை மதியம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும், 1–7–2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும், 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு வட்டார துணை தலைவர் அண்ணாமலை பரமசிவன் தலைமை தாங்கினார். தனியார் கல்லூரி அலுவலர் சங்க பொருளாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தமிழரசன், துணை தலைவர் ஜெகநாதன் ஆகியோர் பேசினர். முடிவில் வட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
