தருமபுரி

குறைந்தபட்ச ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி ஆட்சியரிடம் துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, பத்து பேரூராட்சிகள், 251 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணி புரிபவர்களில் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். 

அங்கு ஆட்சியர் மலர்விழியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் முறையான ஊதியம் வழங்ககோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். 

இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணயக் குழு அமைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 1.10.2017 அன்று குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் நகராட்சி பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தலா ரூ.509-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.432-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.355-ம், டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு ரூ.432-ம் வழங்க வேண்டும். 

இந்த ஒருநாள் ஊதியத்தை 26-ஆல் பெருக்கி மேற்கண்ட தொழிலாளர்களின் மாத ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி அதன் அடிப்படையில் முறையான ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், அந்த மனுவில், "மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

மாவட்டத்தில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 

ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருந்தனர்.