இந்த முறை வாய்ப்புத் தந்தால், அரவக்குறிச்சியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுகிறேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம் மேல்பாகம் ஊராட்சி எல்லைப்பட்டி, நவமரத்துப்பட்டி, விராலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் இனுங்கனூர் ஊராட்சி, மொடக்கூர் மேல்பாகம் ஊராட்சி, சாந்தப்பாடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கட்சியினர் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து நலத் திட்டங்களையும் வழங்கியுள்ளார். ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் ஏழை – எளியோரின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் தற்போது ஒரு சில கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் (வி.செந்தில்பாலாஜி) எம்.எல்.ஏ. ஆனதும் அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

அதற்காக அரவக்குறிச்சி தொகுதியின் வெற்றிக்கனியை கொடுப்பதற்கு பொதுமக்களாகிய நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள் அரவக்குறிச்சி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுகிறேன். எந்த நேரமும் மக்கள் என்னை சந்தித்து குறைகளை கூறலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் (பொதுமக்கள்) கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன்” என்று அவர் கூறினார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் எஸ்.பி.லோகநாதன், ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, நகர செயலாளர்கள் என்.மணிகண்டன், சி.ஏ.சையதுஇப்ராகிம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.மனோகரன் உள்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.