இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரமாக அறியப்படும் சென்னையில், பட்டப்பகலில் கல்லூரி வாசலில் வைத்து மாணவி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் இருந்தன. இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எனவும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனவும் ஆட்சியாளர்களும் காவல்துறையும் மார்தட்டும் மாநிலம் தமிழ்நாடு.

இந்நிலையில், உண்மையாகவே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான மாநகர் தானா? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் படித்துவந்த அஸ்வினி என்ற மாணவியை கல்லூரி வாசலில் வைத்து அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். அங்கு இருந்தவர்கள், அவனை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான நகரான சென்னையிலேயே இந்த நிலை என்றால்..? என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.