தூத்துக்குடி அருகே சாலையில் விபத்துக்குள்ளாகி மூட்டு விலகிய நிலையில் கிடந்த பள்ளி மாணவியை அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் மீட்டு தனது அரசு வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடியை அடுத்த மீனாட்சிப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற மாணவி எட்டயபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பள்ளிக்கு தினமும் சைக்கிளில் செல்வது வழக்கம், இன்று பகல் 12.30 மணி அளவில் வழக்கம்போல் மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவி கீழே விழுந்தார். இதில் அவருடைய இடது கால் மூட்டு விலகியது. இதனால் எழுந்திருக்க முடியாமல் கடும் வெயிலில் சாலையில் கிடந்தார். உடன் வந்த மாணவிகளும்  என்ன செய்தென்று தெரியாமல் திகைத்து  நின்றனர்.

அந்த வழியாக ஏராளமான வாகன ஓட்டிகள் இவர்களை வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.  ஒருவர் கூட அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்டில அந்த மாணவிக்கு என்ன ஆயிற்று என்று இறங்கி வந்து விசாரித்தார்.

பின்னர் உடனடியாக தன்னுடன் வந்த அரசு வாகனத்தில் அந்த மாணவியை ஏற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி வைத்தார். ஆட்சியரின் இந்தச் செயலை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டினர்.