தேனிலவு சென்ற புதுமனப்பெண் காட்டெருமை தாக்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும் தாமரை என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தைத் தொடர்ந்து தேனிலவுக்காக சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்றனர். 

ஊட்டியில் பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். குன்னூரில் உள்ள புகழ் பெற்ற சிம்ஸ் பூங்கா சென்ற தினேஷ், மனைவி தாமரையுடன் கண்டு ரசித்து கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருந்த இடத்தை நோக்கி, திடீரென காட்டெருமை ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அவர்கள் அலறி அடித்து தப்பியோட முயற்சி செய்தனர்.

ஆனால், தாமரையை, காட்டெருமை முட்டித் தூக்கி வீசியது. இதில் தாமரையின் வயிற்றை, காட்டெருமையின் கொம்பு குத்தி கிழித்தது. மாடு முட்டியதில் தினேஷ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காட்டெருமையை விரட்டிவிட்டு, தினேஷையும், தாமரையையும் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலலளிக்காமல் தாமரை உயிரிழந்தார். தினேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுமன தம்பதிகளுக்கு ஏற்பட்ட இந்த விபத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர் அவர்களின் குடும்பத்தினர்.