வேலூர் காட்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோது, வேலூர் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரித் தலைவர் ஜி.ஜி.ரவி மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஜிஜிரவியைக் கொலை செய்தது ரௌடி மகாவின் ஆதரவாளர்கள் தான் என்று பரவி வருகிறது. யார் அந்த மகா? ஜிஜிரவிக்கும் மகாக்கும் என்ன சம்மந்தம்…
கொர.கிருஷ்ணன் என்ற ரௌடிக்கு கார் ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் தான் மகா என்கிற மகாலிங்கம். கிருஷ்ணன் என்கவுண்டரில் இறந்த பிறகு கிருஷ்ணாவின் அடியாட்களோடு அவரின் இடத்திற்கு வந்தார் மகா.

மறுபக்கம், ஜி.ஜி.ரவி சிறுவயது முதல் கில்லி, கோலி, சீட்டாட்டம் ஆடி வந்தவர். அடி, தடி நபராக இருந்த இவர் த.மா.க.வில் இருந்தபோது அமிர்தி காட்டு பகுதியில் சந்தன மரங்களை வெட்டி வந்து விற்பனை செய்து வந்தவர்.
இவர் மீது பாகாயம், வேலூர், வடக்கு, தெற்கு காவல் நிலையங்களில் அடி, தடி வழக்குகள் உண்டு. படிப்படியாக ரவுடியாக வலம் வந்த ஜி.ஜி.ரவி, போலீசியிடமிருந்து பாதுகாத்து கொள்ள அ.தி.மு.க.வில் சேர்ந்து பண பலத்தால் முக்கிய நபராக வலம் வந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் விஜயை நிழல் தாதாவாக இருந்து மிரட்டினார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் புகார் கூறினார். அதன்படி கட்சியிலிருந்து ஜிஜிரவியை நீக்கினார் ஜெயலலிதா.

பிறகு 6 மாதம் கழித்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின்பு மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார், கட்சியில் எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. ஜி.ஜி.ரவிக்கு வேலூரில் எதிரிகள் அதிகம், இதனால் 20 மேற்பட்ட அடியாட்களுடன் தான் காரில் சென்று வருவார்.
பின்னர், இவரின் நடவடிக்கையைக் கண்டு அதிமுகவில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார்.
இரவில் அருகில் உள்ள பாலாற்றிலிருந்து லாரியில் திருட்டு மணல் கடத்தப்பட்டு ஜி.ஜி.ஆர் கல்லூரி வளாகத்தில் காவல்துறை ஆதரவுடன் சேமித்து வந்துள்ளார் ஜிஜிரவி.
கடந்த 2016-ல் இரவு வேலூர் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஜீப்பில் தனது டிரைவருடன் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார்.
அப்போது, லாரியில் மணல் ஏற்றி கொண்டு மிக வேகமாக செல்வதை அறிந்த இன்ஸ்பெக்டர் நிறுத்த சொல்லி சைகை காட்டியும் நிறுத்தாமல் இவர் மீது மோதுவது போல் வந்து வேகமாக சென்ற லாரியை விரட்டி சென்றார்.
அந்த லாரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஜி.ஜி.ஆர் பொறியியல கல்லூரியில் நுழைந்தது. விரட்டி சென்ற இன்ஸ்பெக்டரை கல்லூரிக்குள் விட செக்யூரிட்டிகள் மறுத்தனர்.

பிறகு உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் பாண்டியை, உள்ளே தனது அடியாட்களுடன் புல் போதையில் இருந்த ஜி.ஜி.ரவி, இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து தாக்கி கம்பத்தில் கட்டி போட்டனர்.
“டேய் போலீஸ் நாயே என் இடத்தில் வந்து என் லாரியை சோதனை செய்ய என்ன தைரியம் வேலூர் டி.எஸ்.பி மற்றும் சத்துவாச்சாரி, பழைய இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் சத்துவாச்சாரி போலீசுக்கு பணத்தை வாரி வாரி வழங்குகின்றேன்”. “ஏன்டா., உனக்கு எவ்வளவு தைரியம்,” என்று இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து பளார்., பளார் என்று குடிபோதையில் அடித்தார். அதன் பிறகு ஜீப் டிவைர் ஓடிவந்து ஐயா, இவரு புதுசா வந்த இன்ஸ்பெக்டர் இவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஜி.ஜி.ரவியிடம் கெஞ்சினார்.
அடியாட்கள் 15 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். உஷாரான இன்ஸ்பெக்டர் தன்னுடைய வாக்கி டாக்கி மூலம் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
மணல் கொள்ளையில் பங்கு வாங்கி கொள்ளும் வேலூர் டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வேறு வழியின்றி சென்றனர்.
டி.எஸ்.பி., பன்னீர் செல்வம், ஜி.ஜி.ரவியிடம் மன்றாடி அவரை விட்டு விடும்படி கெஞ்சினார். ஜி.ஜி.ரவி, ஏய் டி.எஸ்.பி., என்னை பற்றி ஏன்யா இந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லவில்லை. ஒழுங்கா கூட்டிட்டு போ இல்லையெனில் உனக்கும் இதே கதிதான் என்று கூற சக போலீஸ்காரர்கள் முன்னிலையில் அவமானப்பட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பாண்டியிடம் சென்று நாம் இங்கிருந்து போய்விடலாம் பிறகு சமாதானம் பேசிக் கொள்ளலாம் என்று கூற இன்ஸ்பெக்டர் பாண்டி மறுத்துவிட்டார்.

ரவியை கைது செய்யவில்லையெனில் இந்த இடத்தில் நான் சாகின்றேன் என்று கூற அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி., பன்னீர்செல்வம்., மாவட்ட எஸ்.பி., பகவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஜி.ஜி.ரவியை, காவல் நிலையத்திற்கு அழைந்து வரும்படி எஸ்.பி., உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் டி.எஸ்.பி., ஆபீசுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் 15 அடியாட்களை அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர். ஜி.ஜி.ரவி மற்றும் 15 பேர் மீது 304 கொலை முயற்சி, 307, 353, 379, 323, 148, 147,294 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஜி.ஜி.ரவியை அழைத்து சென்ற போது சிறைக்கு செல்லாமல் அங்கேயும் ரவுடிதனம் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பாண்டி குடித்துவிட்டு தன்னை தாக்கியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அடம்பிடித்தார். எப்.ஐ.ஆர்., போட்டால் தான் சிறைக்குள் செல்வேன் என்று போலீசாரை மிரட்டினார்.
4 மணி நேரத்திற்கு பிறகு பாண்டி மீது சி.எஸ்.ஆர் போட்ட பின்பு ரவுடி ரவி ஜெயிலுக்குள் சென்றார்”. இது ஜிஜிரவியின் அட்டூழியத்திற்கு ஒரு சாம்பில் தான்.
அதேபோல் ஜிஜிஆர் கல்லூரி வளாகத்தில் பள்ளம் வெட்டப் பட்டு செம்மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு அதன் மீது கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் ஊர் அறிந்த விசயமே.
சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியைத் தாக்கியதாலும், ஜெயிலுக்கு சென்றதாலும் மீண்டும் 2016-ல் ஜி.ஜி.ரவியை கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா.
மகாவும், ஜிஜிரவியும் ஒன்றாக சேர்ந்து பல சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இருவர் மீதும் வழிப்பறியில் இருந்து கொலை வரை வழக்குகள் உள்ளன.
ஒருகட்டத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் தனிதனியாக தங்களது ரௌடிசத்தை அரங்கேற்றி வந்தனர்.
கடந்த் 2013-ல் ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ்-ஐ வெட்டி கொலை செய்தார் மகா. இக்கொலை தொடர்பாக, மகா கைது செய்யப்பட்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம், ஜிஜிரவியைப் போட்டுத் தள்ள மகா முடிவு செய்தார். கோவில் திருவிழாவுக்கு பக்தர் போல வேடமணிந்து வந்தனர் மகாவும் அவரது அடியாட்கள் இருவரும்.
கூட்டத்தில் இருந்த ஜிஜிரவியின் ஆதரவாளர்களால் மகாவைக் கண்டுக்கொண்டு அவரை இரும்புக் கம்பியாலும், கட்டையாலும் சரமாரியாக அடித்தனர். உயிர்பிழைக்க தப்பி ஓடிய மகாவை விரட்டிப் பிடித்து வெட்டின. அப்போதும், அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அப்போது, ஜிஜிரவியின் மகன்கள், மகாவின் முகத்தில் கல்லைப் போட்டுக் கொன்றனர். அதன் பின்னர், காவல்துறை விசாரணையில் ஜிஜிரவியின் மகன்கள், தம்பி மற்றும் பலரை கைது செய்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் நீடித்து வந்தது தெரிகிறது. மகாவைக் கொன்ற பிறகு, அவரது காதலி செணபகவள்ளி மகாவிற்காக நிச்சயம் பழிவாங்குவேண் என்று சபதம் போட்டார்.
கொலை செய்யப்பட்ட மகாவின் கூட்டாளிகள் ஜி.ஜி.ரவியை கொலை செய்ய தக்க தருணம் பார்த்து கொண்டு இருப்பதை அறிந்து ஜிஜிரவி இரத்தினகிரி அருகில் உள்ள பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரவில் தனது அடியாட்களுடன் தங்கி இருப்பார்.
இந்த நிலையில், காட்பாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு ஜி.ஜி. ரவி வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஜி.ஜி.ரவியின் தலை, கையில் பலமாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை மீண்டும் மீண்டும் வெறி தீர வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே ஜிஜிரவி உயிரிழந்தார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம், காட்பாடி காவல் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஜி.ஜி.ரவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வேலூரில் பல ஆண்டுகளாக கிருஷ்ண பக்தர் என்ற போர்வையில் சுற்றி வரும் ரவி மீது காவல்நிலையத்தில் பல புகார்கள் உள்ளது. தொடர்ந்து இவரால் அ.தி.மு.க., அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முக்கிய அ.தி.மு.க., நிர்வாகிகள் இவருடன் தொடர்பில் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரௌடிகளாக வலம் வந்த இருவர், ரௌடித் தொழிலில் ஏற்பட்ட பகை காரணமாக ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று இறந்துள்ளனர்.
மகாவைக் கொன்ற பிறகு அவரது அடியாட்கள் காத்திருந்து ஜிஜிரவியை போட்டுத் தள்ளியுள்ளனர். தற்போது, போட்டுத் தள்ளிய மகாவின் ஆட்களை மீண்டும் ஜிஜிரவியின் மகன்களோ, தம்பியோ அல்லது அவரது அடியாட்களோ கொன்று குவிக்கலாம்.
இப்படி தனிப்பட்ட இரண்டு ரௌடிகளின் பிரச்சனையால் அமைதிப் பூங்காவான தமிழகம் அமைதி இழந்துள்ளது.
இவர்கள் சில்லறைக்காக ரௌடித் தனம் செய்யும் போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க மாட்டார்கள். அப்போது, விட்டுவிட்டு தற்போது இவர்களுக்கெ சல்யூட் அடித்துக் கொண்டு என்கவுண்டர் செய்ய காத்திருக்கிறது என்பது தான் உண்மையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்று..
