காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. 

சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் புஷ்பா(20) செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜான்மேத்யூ(22) இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜான் மேத்யூ டைலராக பணி புரிந்து வருகிறார். கல்லூரி படிப்பை முடித்த ஜெனிபருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. 

இதற்கிடையே டெய்லர் வேலை செய்யும் ஜான் மேத்யூவை காதலிக்கக் கூடாது என்று ஜெனிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே எங்கே காதலி தனக்கு கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற கோணத்தில்  சிந்தித்த  ஜான் மேத்யூ ஜெனிபரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.  

அதன்படி இருவரும் பைக்கில் மாமல்லபுரம் சென்று சுற்றிப் பார்த்தனர். மாலை ஆனதும் புலிக்குகை என்ற பகுதிக்கு ஜெனிபரை அழைத்துச் சென்ற ஜான் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பது போல பெட்டி ஒன்றை திறந்தார். அதில் பரிசு பொருள் இருப்பதற்கு பதிலாக சுத்தி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் ஜெனிபர்.

சுதாகரிப்பதற்குள் பல முறை சுத்தியைக் கொண்டு தனது காதலியை ஜான் கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ஜெனிபர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த பின்னர் அவர் அணிந்திருந்த துப்பட்டாவைக் கொண்டே அங்கிருந்த மரத்தில் ஜான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.