நாமக்கல்

கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்து இன்று நாமக்கல்லில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்., "கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும்,

மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்த வலியுறுத்தியும்" கடந்த 12-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இந்தப் போராட்டத்தால் தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் 4200 கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் டன் கியாஸ் வீதம் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கொண்டு செல்வது தடைபட்டு வருகிறது. இதனால் பாட்லிங் பிளாண்டுகளில் ஓரிரு நாட்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனிடையே நேற்று மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 9.30 மணி வரை நீடித்தது. அதன்பின்னர், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"மாநிலம் வாரியான டெண்டர் என்ற அரசின் கொள்கை முடிவில் மாற்றம் செய்ய முடியாது" என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

மாநில அளவிலான டெண்டரில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் எடுத்து கூறினோம். அவற்றில் சில நிபந்தனைகளை தளர்த்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்க உறுப்பினர்களின் கருத்தை கேட்டு, முடிவு அறிவிப்பதாக கூறி உள்ளோம்.

அதன்படி நாளை (அதாவது இன்று) நாமக்கல்லில் தென்மண்டல் பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்களின் அவசர பொதுக்குழுவை கூட்ட உள்ளோம். சங்க உறுப்பினர்களின் கருத்தை கேட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்வோம். அதுவரை எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார்.