சென்னை வேளச்சேரி அருகே பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிக்கரணை போலீசார், சம்பவ இடத்துக்கு மாறு வேடத்தில் சென்று, தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, வடக்குப்பட்டு, பொன்னியம்மன் கோயில் ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர், சுற்றி திரிந்தார். அவரை, போலீசார் அழைத்தனர். உடனே அவர், அங்கிருந்து தப்பியோடினார். உடனே போலீசார், அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, காஞ்சா என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், மேடவாக்கம் அருகே ஜல்லடியன்பேட்டை, பல்லவன் நகரை சேர்ந்த வேலு (33) என தெரிந்தது. மேலும் விசாரணையில், கஞ்சாவை மொத்த வியாபாரியிடம் வாங்கி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக வைத்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேலுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வேலு, ஏற்கனவே கஞ்சா பதுக்கி வைத்த்தற்காக, சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.