திருப்பூர் பல்லடம் அருகே அதிகாலை வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை அடித்து பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

பல்லடம் கணபதிபாளையம் திருமலைநகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் பனியன் நிறுவன மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து வீடு திரும்பிய வெங்கட்ராமன் குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அதிகாலை அவரது வீட்டினுள்,கத்தி,இரும்பு ராடுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 9 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வெங்கட்ராமனைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கட்ராமன் கூச்சலிட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைபார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோட முயன்றது.

சுற்றிவளைத்த பொதுமக்கள்,பிடிபட்ட மூன்று கொள்ளையரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய 6கொள்ளையர் தாங்கள் வந்திருந்த ஆம்னிவேனில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து மூன்று கொள்ளையரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொள்ளையரையும் கொள்ளை முயற்ச்சிக்குப் பயன்படுத்திய ஆம்னி வேனையும் தேடி வருகின்றனர்.