கஜா புயல் காரணமாக, கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க, 24 மணி நேரம் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

மீனவர்கள் அனைவரும் அவர்களது அலைபேசி மூலம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிந்துகொள்ளலாம். புயல் உருவாகும் முன், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளை பத்திரமாக கரை திரும்பிட ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல், புதுச்சேரி மீன்வளத்துறையினர் ‘கஜா’ புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதையொட்டி, 500க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலால், கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து 500 க்கும் விசைப்படகுகள், பைபர் படகுகளை மீனவர்கள் தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர்.