தமிழகத்தில் கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1,146.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் ருத்ரதாண்வம் ஆடியது. இதில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் கடும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. 

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக ஆயிரத்து 500 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக 15 ஆயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார். மத்திய குழுவும் புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்திருந்தது.

 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவியாக ஆயிரத்து 146 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.