தருமபுரி

விவசாயிகளின் 40 வருட கோரிக்கையான சென்னாக்கல் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றக் கோரி காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூரில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இதற்கு திமுக ஒன்றியச் செயலர் சி.தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு பேசியது:

"தென்பெண்ணை ஆற்றில் சென்னாக்கல் என்னுமிடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் சுமார் 40 வருடங்களாக கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி, கீழ்மொரப்பூர், கே.வேட்ரப்பட்டி, எச்.அக்ராஹரம், கொங்கவேம்பு, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர்.

சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும். மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. எனவே, சென்னாக்கல் நீர்ப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கை வலியுறுத்தி மார்ச் மாதம் இறுதியில் சிறப்பு மாநாடு, ஏப்ரலில் நடைபயணம், தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் கையிலை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், மாவட்ட குழு உறுப்பினர் பி.வி.மாது, வட்டக்குழு உறுப்பினர் கே.என்.ஏழுமலை உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.