திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த பழ வியாபாரிகளை அகற்ற வந்த காவலாளர்கள் பழ வியாபாரியை எட்டி உதைத்து அத்துமீறியுள்ளனர். இதனைக் கண்டித்து பழ வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, காந்தி சாலை, சந்தை சாலை, புதிய பேருந்து நிலையத்திற்கு போகும் வழிகளில் பழ வியாபாரிகள் தள்ளு வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் கடைகள் வைத்துள்ளனர். இதனால் அப்பாதைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறதாம். 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி உத்தரவிட்டதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் காவலாளர்கள் நேற்று அந்த ஆக்கிரமிப்பு பகுதிக்குச் சென்றனர். 

அப்போது காந்தி சாலையில் பழ வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஜெயராமனின் தந்தை நடராஜன் நடைப்பாதையில் பழக் கடை ஒன்றை வைத்திருந்தார். அவரை காவலாளர்கள் எட்டி உதைத்து, அசிங்கமாக திட்டியும் கடையை எடுடா என்று மிரட்டியுள்ளனர். இதற்கு சக வியாபாரிகள் சாட்சி. 

காவலாளர்களின் இந்த கொடுஞ்செயலைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் மார்க்கெட் சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த காவலாளார்களின் அத்துமீறலால் போராட்டம் ஏற்பட்டு மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, உதவி ஆய்வாளர்கள் ஜமீஸ் பாபு, சங்கர், தரணி, கோவிந்தசாமி மற்றும் தாசில்தார் கிருஷ்ணசாமி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் அங்கு வந்தனர்.

“அதிகாரிகளுடன் நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வரலாம். சாலை மறியலை கைவிடுங்கள்" என்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வழக்குரைஞர் சுப்ரமணியன் பழ வியாபாரிகளை அழைத்துக் கொண்டு ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், “நான் மிரட்டினேனே தவிர எட்டி உதைக்கவில்லை. எனக்கு போக்குவரத்திற்கு பிரச்சனை இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த காவலாளார்களின் அத்துமீறலால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.