அரியலூர்

அரியலூர் பாரம்பரிய விதைகள் முதல் இயற்கை உணவு முறைகள் வரை மக்கள் அறிந்துகொள்ள விதைத் திருவிழா நடைப்பெற்றது.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாரம்பரியத்தை போற்றும் விதைத் திருவிழா நடைபெற்றது.

இதனை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்துப் பேசினார்.

இந்தத் திருவிழாவில் பாரம்பரிய விதைகளான நீலப்புடலை உள்ளிட்ட காய்கறி விதைகள், மூலிகைகள், அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, நவரா, குதிரைவாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்டவையும், நவதானியங்களான வரகு, பனிவரகு, சாமை, தினை, நவதானியத்தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், நாட்டு துவரை, நாட்டுப் பருத்தி விதைகள், கீரை வகைகள், தேன், செம்புபாத்திரங்கள்,

இயற்கை முறையில் தயாரான வாசனை திரவியங்கள், சோப்பு வகைகள், மரசெக்கில் தயாரான எண்ணெய் வகைகள், காய்கறி விதைகள், அபூர்வ வகை மரச்செடிகள் மற்றும் விதைகள், நாட்டுவகை மாடுகள், கோழிகள், பஞ்சகாவ்யா, பூச்சிவிரட்டிகள் ஆகியவற்றை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்தத் திருவிழாவைக் காணவந்த விவசாயிகள், பாரம்பரிய விதைகள், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், செடிகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

மேலும், இந்தத் திருவிழாவில் இயற்கை இடுபொருள்கள், இயற்கை உணவு முறைகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பெரம்பலூரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், விவசாயியுமான ரமேஷ்கருப்பையா பங்கேற்று, நம்நாட்டில் இருந்த, இப்போது பயன்படுத்தி வரும் பருத்தி விதைகள், அவற்றின் வகைகள், பி. டி பருத்தி விதைகளால் நாட்டுவிதைகள் அழிவுபற்றி பேசினார்.

பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம், இயற்கை வழியில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.

இந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் செய்திருந்தனர்.