from nex t year NEET wil apply for engineering couselling
பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்த ஆண்டு இதுவரை அட்மிஷன் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மட்டுமாவது மருத்துவ படிப்புக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் போராடி வருகிறது.
இது தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2018 – 2019 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் நீட் முறையை ஏற்றுக்கொள்ளும்போது நாமும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.
எனவே அடுத்த ஆண்டு இப்போது போல பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் தரமுடியாது என கூறினார்.
