friends of sekar reddy appeared before enforcemeent officer

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சேகர் ரெட்டியைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 

சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். 

இதனிடையே சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை நேற்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் அவர்கள் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே இரு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.