பெரியாருக்கே இடம் இல்லையா! கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பெரியாரின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது, கருத்துரிமையின் கழுத்து நெரிக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Freedom of expression has been strangled in Parliament itself: M.K. Stalin sgb

நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாநிலங்களவையில் திமுக எம்.பி., அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!" என்று விமர்சித்துள்ளார்.

மேலும், "மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!" என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 370 மற்றும் 35A ஆகியவை நீக்கப்பட்டது சரியே என்று உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, பேசிய திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா, தந்தை பெரியாரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, "காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கிற்கு சர்தார் வல்லபபாய் படேல் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்றி இருக்க வேண்டும். படேலுக்கு சிலை வைப்பதைவிட இதுதான் முக்கியம்" என்று கூறினார்.

அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அப்துல்லாவின் பேச்சில் பெரியாரின் கருத்துகளை மேற்கோள்கள் காட்டிய பகுதி மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios