free insurence plan for tamilnadu students

தமிழகத்தில் 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சனிக்கிழமை தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது. மேலும் பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை நினைத்து அச்சப்பட தேவையில்ல என்றும் கூறினார்.

இந்நிலையில் பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை அரசு அறிவிக்க உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது என்றும், மேலும் பொது தேர்விற்காக 450 மையங்களில் சனிக்கிழமை தோறும் முழு பயிற்சி அளிக்க விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.