Free House Patta Asking Load Workers Waiting protest

திருச்சி

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், காந்தி சந்தைக்கு லாரிகளில் கொண்டுவரப்படும் காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை இறக்கி, ஏற்றும் பணியில் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலால் திருச்சி காந்தி சந்தை அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் காந்தி சந்தையில் பணிபுரிந்து வரும் சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களுக்கு கள்ளிக்குடி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 

பல கிலோ மீட்டர் தூரம் சென்று பணியாற்றும் அவல நிலைக்கு தள்ளக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காந்தி சந்தை மற்றும் வெங்காயமண்டி சுமைப்பணி தொழிற்சங்க கூட்டுக்குழு இயக்கத்தினர் நேற்று காலை திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி போராட்டத்தில் கலந்து கொள்ள சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் பெரியகடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். 

இதுபற்றி முன்பே அறிந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கேயே சாலையில் தொழிலாளர்கள் அமர்ந்து காவலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் காவலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். 

அவர்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் அகிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்” என்றார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.