பாக்ஸ்கான் தொழிற்சாலையின் தங்குமிடம் மற்றும் உணவு வசதி தொடர்பாக பெண் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உள்ளூர் நிர்வாகக் குழுவை மறுசீரமைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தொழிற்சாலையில் பணிச்சூழல்,தொழிலாளர் நலன் உயர் தரத்தில் உள்ளதாக என்று உறுதிசெய்யப்படும் என ஆப்பிள் நிறுவனமும் கூறியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் இங்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் என சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலையின் ஏற்பாட்டில், பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூந்தமல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 பெண்கள் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியதையடுத்து, பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கடந்த 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்கும் விடுதிகளில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர் கலந்துக்கொண்டனர். இதனிடையே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு பெண் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனையடுத்து கடந்த 23 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு சார்பில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் தரப்பில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும் என்றும் எடுத்துரைக்கபட்டுள்ளது

இந்தநிலையில் இன்று பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
பாக்ஸ்கானின் ஸ்ரீபெரும்புதூர் ஆலை சார்ந்த இடங்களில் வசதி குறித்து ஆய்வு செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் தங்குமிட நிலைமைகள் குறித்து கூடுதல் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். தொழிற்சாலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் முன்பாக தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஊழியர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். தொழிற்சாலையின் உள்ளூர் நிர்வாகக் குழு மற்றும் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைத்து உள்ளதாகவும் இதனால் தேவையான உயர் தரங்களை அடையவும் பராமரிக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஆலையின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் உயர் தொழில் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் ஆலை திறக்கப்படும் என்று கூறினார்.