Four sand quarries within 10 km distance Vsk Demand to Ban
நாகப்பட்டினம்
மயிலாடுதுறையில் 10 கி.மீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டுள்ள நான்கு மணல் குவாரிகளை தடை செய்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பொன்னுதுரை, வைத்தியநாதன், செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணை அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்றார்.
இதில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலச் செயலாளர் குடந்தை தமிழினி, நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “மதுரையில் கட்சி நிர்வாகி முத்தழகன் கொலை செய்யப்பட்டதை கண்டிப்பது,
ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்.
மயிலாடுதுறை அருகில் கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீட்டர் தொலைவிற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள நான்கு மணல் குவாரிகளை தடை செய்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதிச் செயலாளர் கதிர்வளவன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் ரியாஸ்கான் உள்பட பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
