திருவாரூர்

கோட்டூரில் பயிர்க் காப்பீட்டுத் தொகை தராததால் சினம் கொண்ட நான்கு கிராமத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2016 – 17–ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது பயிர்க் காப்பீட்டுத் தொகை கோட்டூர், ரெங்கநாதபுரம், குன்னியூர், செருகளத்தூர் ஆகிய நான்கு கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் சினம் கொண்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி நேற்று கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் ஜீவானந்தம், மனோகரன், சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு பகுதியினர் கோட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றித் தகவலறிந்த திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார், திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மன்னார்குடி துணை தாசில்தார் சந்திரமோகன், கோட்டூர் காவல் ஆய்வாளர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

அங்கு விவசாயிகளின் பிரதிநிதிகளான முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் சண்முகவேலு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என வேளாண்மை உதவி இயக்குனர் உறுதியளித்தார்.

அதன்பேரில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்தப் போராட்டத்தினால் மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.