மண்ணச்சநல்லூர் அருகே வியாபாரியின் பணத்தை திட்டம்போட்டு கொள்ளையடித்த நால்வரை கைது செய்து காவலாளர்கள் சிறையில் அடைத்தனர்.
பெங்களுர், மஹாலெட்சுமி லேய்அவுட் பகுதியைச் சேர்ந்த நாராயணரெட்டி மகன் ஆறுமுகம் (48), இவர் வெங்காயங்களை கொள்முதல் செய்து திருச்சி காந்தி சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்கிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் திருச்சி காந்தி சந்தையில் வெங்காயங்களை விற்பனை செய்துவிட்டு அதற்குறிய ரூ.2 இலட்சத்து 20 ஆயிரம் பணத்தை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு, பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருச்சி - சேலம் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பேருந்து நெ.1 டோல்கேட் அருகே வந்ததும், அவருக்கு அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் சில்லரை காசுகளை கீழே சிதறவிட்டு ஆறுமுகத்தின் கவனத்தைத் திசை திருப்பி அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கினார். இதனைச் சுதாரித்துக் கொண்ட ஆறுமுகம் கைப்பையை விடாமல் பிடித்துக் கொண்டு, “அய்யோ என் பணம் பணம்” என கூச்சலிட்டார்
அதற்குள் அந்த நபர் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் கைப்பையில் இருந்த 60 புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் இதுகுறித்து கொள்ளிடம் நெ.1 டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் கொள்ளிடம் நெ.1 டோல்கேட் காவல் சப்-இன்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெ.1 டோல்கேட் பகுதியில் சந்தேகத்திற்குறிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த 4 பேரை காவலாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள இ.பி.ரோடு, அண்ணா நகர், கோழி பண்ணையைச் சேர்ந்த இராமையா மகன் முருகன் (52), சின்னையன் மகன் சுப்பிரமணி (33), இராஜேந்திரன் மகன் சரவணன் (30), கருப்பையா மகன் பாண்டிசெல்வம் (38), என்பதும், அவர்கள்தான் பேருந்தில் ஆறுமுகத்திடம் பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து முருகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த காவலாளர்கள் திருச்சி குற்றவியல் துணை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமர்ப்பித்தனர். வெங்காயத்தை விற்பனை செய்தததில் இருந்து, முருகன் பணத்தை பெற்று பையில் வைத்ததுவரை அவரை பின்தொடர்ந்து திட்டமிட்டு இந்த திருட்டை செய்தோம் என்று நீதிபதி முன்னிலையில் ஒப்புக்கொண்டனர்,
பின்னர், திருச்சி மத்திய சிறையில் அவர்கள் நால்வரையும் அடைத்தனர்.
