Four arrested for running bars without permission and sealed the bars

புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில், அனுமதியின்றி சாராயக் கடை பார்கள் நடத்திய நால்வரை கைது செய்த மதுவிலக்கு காவலாளர்கள் இரண்டு பார்களுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை நகரில் அனுமதியின்றி சாராயக் கடை பார்கள் நடத்தப்படுவதாகவும், அங்கு கூடுதல் விலைக்கு சாராயம் விற்பனை செய்யப்படுவதாகவும் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலாளர்கள் மற்றும் டாஸ்மாக் சாராயக் கடை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன், டாஸ்மாக் தாசில்தார் சார்லஸ், கோட்ட கலால் அலுவலர் மனோகரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் காவலாளர்கள் புதுக்கோட்டை நகரில் உள்ள புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை சாலை, பழனியப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடை பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், பார்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 510 சாராய பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 600-ஐயும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை உழவர்சந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு சாராயக் கடை பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பார்களில் சாராய பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சூசைராஜ், புதுக்கோட்டை மேல 2-ஆம் வீதியைச் சேர்ந்த செந்தில், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், திருவரங்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகிய நால்வரையும் மதுவிலக்கு காவலாளர்கள் கைது செய்தனர்.