முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவரது தந்தை தசரதன். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தன்போது 10 ஆண்டுகள் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் தசரதன். இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

சென்னை, இந்திரா நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தமிழக அரசு, தசதரனுக்கு வீடு ஒதுக்கி கொடுத்திருந்தது. தசரதனின் மறைவுக்குப் பிறகு, மனைவி மற்றும் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அந்த குடியிருப்பு தசரதனின் மனைவி லோகநாயகி பெயருக்கு 2014 ஆம் ஆண்டு கிரையம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், லோகநாயகியின் வீட்டுக்கு மாற்றப்பட்ட குடியிருப்புக்கு, சரோஜா, கே.வி.சுசிலா, மோகனகிருஷ்ணன் என்பவர்கள் உரிமை கொண்டாடியுள்ளனர். வீடு தங்களுக்கே சொந்தம் என்பது போல போலி ஆவணங்களை உருவாக்கி பத்திர பதிவும் செய்துள்ளனர்.

இதனை அறிந்த லோகநாயகி, இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட சார் பதிவாளர் (அடையாறு) ஆர்.மணிகண்டன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவரது புகாரை விசாரித்த சார் பதிவாளர், தசரதன் மறைவுக்குப் பின்னர், வாரிசுதாரரான அவர் மனைவி லோகநாயகி பெயரில் 2014 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்து தரப்பட்டுள்ளது.

ஆனால் 1997 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் சரோஜா மற்றும் அவர் குடும்பத்தினரால் அரசுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டு, ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவுகளைச் செய்துள்ளனர். எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சார் பதிவாளர் மனு ஒன்றை அனுப்பி வைத்தார்.

இதனை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வி.கணேசன் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின் மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சரோஜா, கே.வி.சுசிலா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.