பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 25–ம்தேதி மேயராக சைதை துரைசாமி மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். அவர்களுடைய 5 ஆண்டுகள் பதவி காலம் நேற்று முன்தினம் முடிந்தது. இதைதொடர்ந்து சைதை துரைசாமி, முன்னாள் மேயர் ஆனார்.
இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, சைதை துரைசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவை பின் வருமாறு.
கேள்வி:– அ.தி.மு.க.வின் முதல் மேயரான நீங்கள் 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துவிட்டீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் நிறைவேற்றிய எந்த திட்டம், உங்களை பெருமைபட செய்கிறது?
பதில்:– முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், ஏழை மக்கள் பயனடையும் வகையில் அம்மா உணவகங்களை திறந்து சாதனை படைத்தது தான் என் மனதிற்கு பூரிப்பையும், பெருமையையும் அளிக்கிறது.
கேள்வி:– நீங்கள் திட்டமிட்ட பணி முடிக்காமல் இருந்து, அதை பதவி காலத்தில் நிறைவேற்றாமல் வந்துவிட்டோமே! என்ற மனக்குறை உள்ளதா?
பதில்:– அப்படி எதுவும் இல்லை. திட்டமிட்ட அனைத்து திட்டங்களையும் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக அம்மா வாரச்சந்தை திட்டம், அம்மா திரையரங்கம் திட்டம், சாலைகளில் குப்பைகள் கண்களில் படாதவாறு குப்பையும், குப்பை தொட்டியும் இல்லாத சென்னையை உருவாக்கும் திட்டம், பெருங்குடி, கொடுங்கையூரில் பூமிக்கடியில் (பங்கர் சிஸ்டம்) ராட்சத அளவில் குப்பை தொட்டி அமைத்து அவற்றில் குப்பைகளை கொட்டி பயனுள்ள வகையில் மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டங்களுக்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டது. அவை அனைத்தும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. அதற்குள் என்னுடைய பதவி காலம் நிறைவடைந்து விட்டது.
கேள்வி:– பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?
பதில்:– மாநகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு மேயராக பதவி ஏற்கும் போது 264 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. பொதுமக்கள் நலன் கருதி மூலிகை செடிகள் நடப்பட்டதுடன், இசையுடன் நடைபயிற்சி தளங்கள், கடிகாரம் வசதி, அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 300 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது 564 பூங்காக்கள் உள்ளன.
கேள்வி: மேயர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?
பதில்:– என்னை மேயர் வேட்பாளராக அறிவித்த பின்னர், பிரச்சாரத்தின் போது முதலமைச்சர், சுத்தமான சென்னை, கை சுத்தமான மாநகராட்சி நிர்வாகம் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை லட்சியமாக கொண்டு நேர்மையுடனும், உண்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டேன். என்னுடைய பதவி காலம் முடியும் வரை அந்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன். இது எனக்கு முழு மனநிறைவும், மகிழ்ச்சியும் தருகிறது.
கேள்வி:– மாநகராட்சியில் திறமையான நிர்வாகத்தை நடத்த முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கினாரா?
பதில்:– ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் புதுப்புது திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். அதன்படி கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். இந்த திட்டம் என் பதவி காலத்தில் கொண்டு வந்தது, என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்
அத்துடன் சமூகநலம், நிர்வாக சீர்திருத்தம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். அதன்படி இந்த 3 அம்சங்களில் 207 புதிய திட்டங்கள் கொண்டு வந்தோம். குறிப்பாக அம்மா இலவச காப்பகங்கள், ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், லட்சக்கணக்கானோருக்கு கொசுவலை வழங்கியது, கொசுக்களை ஒழிக்க நொச்சிச்செடி, டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம்,
நாட்டில் உள்ள எந்த மாநகராட்சி பள்ளியிலும் இல்லாத அளவில் முதல் முறையாக சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளியில் தங்கி படிக்க உண்டு, உறைவிடப்பள்ளி அமைத்தது, பிறந்த நேரத்துடன், தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்று, கட்டிட வரைபடத்தை பெறுவதற்கு எளிமையான முறைகள் கொண்டு வந்தது, போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளிப்பது போன்றவை பெருமை தருகிறது.
என்னுடைய சொந்த நிதியில் இருந்து மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் 15 ஆண்டுகள் வளர்ந்த 213 மரங்கள் வழங்கப்பட்டு, பயனுள்ள வகையில் நடப்பட்டு உள்ளன. வளர்ந்த பனை மரங்களும் விரைவில் நடப்பட உள்ளன. தொடர்ந்து சாலையில் நிற்கும் மரங்கள் நேராகவும், சீராக நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாநகராட்சிகளிலும், மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகள் முடிவடைந்துவிட்டது. இதையொட்டி அனைத்து மாநகராட்சிகளுக்கு, தனி பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி மக்கள் பிரச்சனைகளுக்கு, கவுன்சிலர்களை தேடுவதற்கு பதில், அதிகாரிகளை தேட வேண்டியுள்ளது.
