கோவை வந்த சேவாக்; கோயிலில் மனமுருகி சுவாமி தரிசனம்; திரண்டு வந்த ரசிகர்கள்!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கோவை கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்
இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். 'வீரு' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் வீரேந்திரா சேவாக்கின் அதிரடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்த சேவாக், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் 16,000க்கும் மேல் ரன்களை குவித்துள்ளார். கிட்டதட்ட 38 சதங்களை விளாசியுள்ளார்.
கோயிலில் தரிசனம்
இந்நிலையில், தமிழ்நாடு வந்த வீரேந்திர சேவாக், கோவை பேருர் பட்டீஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நெற்றியில் குங்குமம், விபூதி வைத்தபடி கோயிலுக்கு வந்த சேவாக், சனி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
வீரேந்திர சேவாக் கோவை பேருர் பட்டீஸ்வரம் கோயிலுக்கு வந்ததை அறிந்ததும் அங்கு ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சேவாக்குடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் சேவாக் காரில் ஏறி புறப்பட்டார். சேவாக் கோயிலில் தரிசனம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஈஷா திருவிழாவில் பங்கேற்பு
ஈஷா சார்பில் 16-வது ஈஷா கிராமோத்சவம் எனப்படும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இதில் வீரேந்திர சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. அத்துடன் நாதஸ்வரம் தவில், பஞ்சரி மேளம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் 1000 பேர் கலந்து கொள்ளும் வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்கும் ஒயிலாட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தான் சேவாக் தமிழ்நாடு வந்தது குறிப்பிடத்தக்கது.