Forest fire in the Vallimalai Murugan Temple mountain fire extinguished itself
வேலூர்
வள்ளிமலை முருகன் கோயில் மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ தானாக அணைந்ததால் அடியார்கள், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் அடியார்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இங்குள்ள புகழ்பெற்ற சரவண பொய்கை குளத்தில் பலர் நீராடவும், தீர்த்தத்தை தலையில் தெளித்தும் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைமேல் உள்ள காடுகளில் திடீரென தீப்பிடித்தது.
அங்குள்ள மரங்கள், தாவரங்களில் பிடித்த தீ பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்ததால் மலைக் கோயிலைச் சுற்றியிருந்த பல மரங்கள், செடி,கொடிகள், தீயில் கருகின.
மலை உச்சியில் பிடித்த தீ கீழ் பகுதியை நோக்கி பரவிக் கொண்டிருந்தது. இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மேல்பாடி காவலாளர்கள் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலை அடிவாரத்தில் உள்ள சன்னதிகளின் அருகே தயாராக இருந்தனர். அறநிலையத் துறையினரும் அங்கேயே பதற்றத்துடன் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் தீயின் வேகம் தணிந்து மெல்ல மெல்ல அணைந்தது. தீ பரவியிருந்தால் கோயில் கட்டிடத்துக்கும் அருகில் உள்ள இடங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக தீ தானாக அணைந்ததால் அதிகாரிகள் மற்றும் அடியார்கள் நிம்மதியடைந்தனர்.
தீ முற்றிலுமாக அணைந்ததை உறுதி செய்தபின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் காவலாளர்கள் அங்கிருந்து சென்றனர்.
