திருவாரூர்,

தமிழர்களின் பண்பாட்டை பறைச் சாற்றும் வீர விளையாட்டாக சல்லிக்கட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டுக்கு தடை விதித்ததன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த ஆண்டு சல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி சல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாய்வழித் தகவலைத் தெரிவித்தனர். அதற்கான முயற்சி என்னமொ கேள்விக்குறிதான்.

இதனால் தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில நாள்களா இளைஞர்களின் போராட்டங்கள் எரிமலையாய் வெடித்து சிதறியது. தன்னெழுச்சி போராட்டம் என்று இதை பாராட்டி, டி.என்.ஏவில் ஏதோ மூலையில் புதைந்து கிடந்த தமிழர் உணர்வைத் தூண்டி விட்டுள்ளது இந்த போராட்டம்.

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மூன்றாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்தன. திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு கடந்த 18-ஆம் தேதி பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட தொடங்கினர். இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது. போராட்டத்துக்காக ஏராளமானவர்கள் திரண்டதால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள தெற்குவீதி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மணிகண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், பொருளாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சல்லிக்கட்டு நடத்த மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூரை அடுத்த திருநெய்ப்பேர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல திருவாரூரில் வருமானவரித்துறை அலுவலகம் முன்பாக மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பேரணிக்கு சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு அரசு பணியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துவேல், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மதிவாணன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.