ஊட்டி

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஊட்டியில் சுற்றுலாவைத் தொடர்ந்து காய்கறிகள், டீ விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 40 ஆயிரம் விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும், இதனை பொதுமக்கள் வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.

மேலும் புதியதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்துப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நீலகிரியின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் விவசாயம் மற்றும் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டியில் ஆயிரக்கணக்கான தேயிலை தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஊதியம் தினமும் வழங்கப்படுகிறது.

தற்போது மேற்கண்ட அறிவிப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் காய்கறிகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. சில வியாபாரிகள் நேரிடையாக விவசாய நிலத்திற்கு சென்று, காய்கறிகளை கொள்முதல் செய்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் காய்கறிகளை அறுவடை செய்து ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் காய்கறிகளுக்கு ரூ.500, ரூ.1000 வழங்கினால் விவசாயிகள் அதனை பெற மறுக்கின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. காய்கறி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்கறிகளை அறுவடை செய்யாமல் விட்டு விட்டால், காய்கறிகள் முற்றி எதற்கும் பயன்படாமல் போய்விடும் அபாயம் உள்ளது. விவசாயிகள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தொழிலாளர்கள் வாங்க மறுக்கின்றனர். நீலகிரியில் மட்டும் காய்கறி விவசாயத்தில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வேலைக்கு வந்தால் சம்பளம் என்ற நிலை உள்ளது.

எனவே இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பள பணத்தை செலுத்த இயலாது. இதனால் இவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த அறிவிப்பிற்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி அளவிற்கு காய்கறி வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது வெறும் ரூ.4 கோடி முதல் ரூ. 5 கோடி அளவிற்கு மட்டுமே நடைபெறுகிறது. இதிலும் பெரும்பாலானவை கடனில்தான் நடக்கிறது.

பெரும்பாலான காய்கறி வியாபாரத்தில் உடனடியாக பணம் கிடைப்பது இல்லை. தற்போது சில வியாபாரிகள் காசோலை தருவதாக கூறுகிறார்கள். இதனை வங்கியில் கொண்டு போய் கொடுத்து பணமாக பெற்று, தொழிலாளர்களுக்கு சிரமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

ஊட்டி மார்க்கெட்டில் டீக்கடை நடத்தும் முகமது அலி, “மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், பொதுமக்கள் என பலர் வருகின்றனர். இவர்கள் மூலம் டீக்கடையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.

ஆனால் தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிப்பாலும், சில்லறை தட்டுப்பாட்டாலும் ரூ.5 ஆயிரத்திற்கு கூட வியாபாரம் நடைபெறுவது இல்லை. தெரிந்த நபர்களுக்கு கடன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் எங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்க முடியவில்லை. இதனால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த அறிவிப்பால் பெரும்பாலும் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.