உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து.. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ‘தடை’... இதுதான் காரணமா ?
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கை படிப்படியாக அறிவித்து வருகின்றன. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலால் இந்தியா முழுவதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளின் நேரடி விசாரணை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நேரடி விசாரணை நிறுத்தப்படுகிறது. வழக்குகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் நாளை முதல் நேரடி விசாரணை கிடையாது என்றும், மறு உத்தரவு வரும்வரை அது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும்வரை வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவே விசாரணை நடக்கும் என்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார்.