அதிரடியாக சரிந்த தங்கம் விலையால் அலைமோதும் கூட்டம்; நகை ஆசாரிகளின் விடுமுறை கூட ரத்தாம்
இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்க நகைகள் அதிரடியாக விலை குறைந்து வரும் நிலையில், நகை செய்வதற்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு அண்மையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிரடியாக் குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தால் கலக்கத்தில் இருந்த நகை பிரியர்கள் இந்த விலை குறைப்பை பயன்படுத்தி நகையை வாங்க கடைகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருவதால் இதனைத் தொடர்ந்து வரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகளை ஆர்டர் கொடுத்து வருகின்றனர். மேலும் விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகளும் வரிசகட்டுவதால் நகை பிரியர்களுக்கு தற்போதைய சூழல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஆர்டர்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு தற்போது விடுமுறை கூட அளிக்கப்படுவது கிடையாதாம். அந்த அளவிற்கு வேலை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனிடையே வரி குறைப்பால் ஏற்படும் நட்டத்தை பார்த்து மத்திய அரசு மீண்டும் வரியை உயர்த்தக் கூடும். இதனால் மீண்டும் தங்கம் விலை உயரக் கூடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.