நாமக்கல்

கொல்லிமலையில் “வல்வில் ஓரி” விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியில் பத்து வகையான பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த மலர் படுக்கையைக் கண்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அசந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் “வல்வில் ஓரி” விழாவை முன்னிட்டு அங்குள்ள தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவையொட்டி அங்குள்ள கண்ணாடி மாளிகையில் செர்பிரா, லில்லியம், கிளாடியோலை, டெய்சி, ஆந்தூரியம், கோல்டன்ராடு உள்ளிட்ட பத்து வகையான பூக்கள் கொண்டு மலர் படுக்கை மற்றும் கொய்மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் ஐந்து வண்ணங்களில் உள்ள சுமார் ஐந்தாயிரம் ரோஜா பூக்களால் சோட்டாபீம் போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சிறுவர்கள் வியந்தனர்.

இதுதவிர காய்கறிகள், பழங்கள் மற்றும் கொல்லிமலையில் விளையும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு கோழிப்பண்ணை மாதிரி, கன்றுடன் உள்ள பசு, கொக்கு உள்ளிட்ட பறவைகளும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், மலர்களால் உருவாக்கப்பட்ட வீட்டு மாடி காய்கறித் தோட்டம், புகைப்பட பிரியர்களை கவரும் வகையில் இதய வடிவிலான பூக்களால் ஆன அலங்காரம் போன்றவை சுற்றுலப் பயணிகளை ஈர்க்க அமைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர கொல்லிமலையில் விளையும் மிளகு, காபி, காய்கறிகள், பழங்கள் போன்றவையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகளோடு ஆட்சியர், சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கண்டு இரசித்தனர்.