flood in tamil nadu and kerala rivers

‘ஒகி’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக் கூடும் என்பதால் இந்த இரு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் வரும் என்றும், அனைத்து அணைகளும் நிரம்பும் என்றும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்டலில் கன்னியாகுமரி அருகே உருவான ‘ஒகி’ புயலால் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது, குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை இந்தப் புயல் புரட்டிப் போட்டது.

இந்த புயல் லட்சத் தீவு நோக்கி நகர்ந்துவிட்டாலும் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் அதிக அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அடுத்த 12 முதல் 24 மணிநேரத்தில் கனமழை பெய்யவுள்ளதால் நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றும் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கிழக்கு நோக்கி பாயும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிக்கும் என்றும் நீர்வள ஆணைம் தெரிவித்துள்ளது..

இதே போன்று வைகை ஆற்றில் குறிப்பிடப்படும் அளவிற்கு நீர்வரத்து இருக்கும் என்றும், இதனால் வைகை அணையின் நீர்மட்டம் அபரிமிதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாவட்டங்களில் உள்ள அமராவதி, பவானி ஆறுகளிலும் நீர்வரத்து உயரும் என்றும், இதனால் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள அமராவதி, மோயாறு, பில்லூர், பவாவனி சாகர் போன்ற அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. 



விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கோமுகி, வில்லிங்டன் அணைகளிலும் மழை காரணமாக நீர்மட்டம் உயரும். நீர்வரத்து அதிகரிப்பதால் டிசம்பர் 2 முதல் 6 வரை சென்னையை சுற்றி உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்றும் நீர்வள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, எர்ணாகுளம் பகுதிகளில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் அடுத்த 24 மணிநேரத்தில் நீர்வரத்து வெகுவாக அதிகரிக்கும். பிறகு மழை குறைய, குறைய, நீர்வரத்தும் படிப்படியாக குறையும் என்றும் நீர்வள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.