மருத்துவத்தை காஸ்ட்லி வணிகமாகக் கருதும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மத்தியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திந்திரன் காலமானார். 

கைராசி டாக்டர் என்று மக்களால் பாராட்டப்படும் டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், 5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்டவர் கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன். இவரது அப்பா சுப்பிரமணி விவசாயி. பாம்பு, தேள் கடித்தால் கூட 30 கி.மீ.தாண்டிப் போய்  மருத்துவம் பார்க்க வேண்டிய சூழலில் இருக்கும் தன் கிராமத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே ஜெயச்சந்திரன் மருத்துவம் படித்தார். 

மருத்துவம் வியாபாரமாகி விடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்ட ஜெயச்சந்திரன் தன் கிராமமான கொடைப்பட்டினத்தைப் போலவே அடிப்படை வசதி இல்லாமல் இருந்த வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971-ம் ஆண்டில் கிளினிக்கை ஆரம்பித்தார். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்த பட்சம் 2 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 5 ரூபாய் வரை கட்டணம் வாங்கினார். சுமார் 41 ஆண்டுகளாக இதே கட்டணத்தையே பெற்று வந்தார். 

1000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்திய டாக்டர் ஜெயச்சந்திரன் 'நேதாஜி சமூக சேவை இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்குத் தேவையான உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். அவரது மறைவு ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.