Five fishermen arrested by Lankan Navy

இராமநாதபுரம்

மீனவர்கள் 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று ஒருவாரம் கூட ஆகல அதற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14–ஆம் தேதி இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதனிடையே இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்தால் கைது செய்வோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கடற்படையினர் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையைத் தொடர்ந்து இராமேசுவரம், பாம்பன், மண்டபம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதிக்குச் செல்வதை தவிர்த்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மண்டபத்தில் இருந்து சில விசைப்படகுகளில் மீனவர்கள் வழக்கம்போல் நெடுந்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் வலையை விரித்து மீனுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் சுற்றுக் கப்பல்களில் வந்தனர். அவர்கள், மீனவர்களை கண்டதும் ‘‘இது எங்கள் எல்லைப் பகுதி, இங்கு மீன்பிடிக்கக்கூடாது’’ என எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது தங்கச்சிமடம் அருமைநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ரஞ்சன் (40), ராஜபாலன், எவிரோன், உச்சிப்புளி அருகே மண்குண்டுவை சேர்ந்த நவநீதன், முத்துக்குமார் ஆகிய ஐந்து மீனவர்களையும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

பிறகு அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர். அவர்களை வருகிற 30–ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக தொண்டி மற்றும் பாம்பனைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.