மத்திய அரசை கண்டித்து, மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்போவதாக அறிவித்தது. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் வெளியானது. இதுவரை 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை.
இதற்கிடையில் பொதுமக்கள், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த பொருளும் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். கையில் பணம் இல்லாமல், வங்கியில் சென்று மாற்றுவதற்காக அதிகாலை முதல் இரவு வரை வங்கியின் வாசலில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சனையில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாததால் தங்கள் படகுகளுக்கு டீசல் நிரப்ப முடியவில்லை என்பதே ராமேஸ்வரம் மீனவர்களின் கவலையாக உள்ளது. இதனையடுத்து பணப்பரிவர்த்தணை சீராகும் வரை வேலை நிறுத்தம் செய்யவும், ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற சங்க கூட்டத்தில் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகள் பிரச்சனை தீரும் வரை மீன்பிடிக்க செல்வதில்லை என்பது அவர்களின் நிலையாக உள்ளது.பாடாகும்.
