Fishermen who did not return to Christmas should included in mysteries list - Sarath Kumar
கன்னியாகுமரி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கரை திரும்பாத மீனவர்களை மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "'ஒகி’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் அறிந்து கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டம் வந்தேன். புயலால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்தி இருக்கின்றன.
நேற்றைய தினம் (அதாவது டிசம்பர் 16 ) கடற்கரை கிராமங்களுக்குச் சென்று, புயலினால் கடலில் மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பணியை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்பு கொள்ள நவீன கருவிகள் வழங்க வேண்டும்.
கடலில் மாயமான மீனவர்கள் இறந்ததாக உறுதி செய்ய ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. அந்தக் காலத்தை குறைத்து, மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகையினை விரைவில் கிடைக்கச் செய்ய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மேலும், மக்களின் பிரச்சனைகளை முதலமைச்சரிடம் எடுத்து கூறி உரிய நிவாரணங்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடலுக்குச் சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்புவார்கள் என்ற தகவல் உள்ளது. அவ்வாறு கரை திரும்பாத மீனவர்களை மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. எனவே, ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பது தவறு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆர்.கே.நகரில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டியது தேர்தல் ஆணையம்தான். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும்போது ச.ம.க. தனது நிலைப்பாடை அறிவிக்கும். அதுவரை சற்று பொறுமைக் காக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
