Asianet News TamilAsianet News Tamil

“புதிய ஏலக்கூடத்தை பயன்படுத்த தயக்கம் ஏன்..?” -அமைச்சர் ஜெயகுமார் பதிலால் மீனவர்கள் அதிர்ச்சி!

fishermen shocked about fishing port
fishermen shocked about fishing port
Author
First Published Jun 21, 2017, 1:37 PM IST


காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக் கூடத்தை மீனவர்கள் பயன்படுத்த ஏன் தயங்குகிறார்கள் என்பதை தெரியவில்லை என அமைச்சர் ஜெயகுமார் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் வரை 6 வழி பாதையாக சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஏற்கனவே இருந்த மீன் ஏல மையத்தை அகற்றிவிட்டு, புதிதாக ஏலம் விடும் கூடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு மீன்களை பதப்படுத்தும் அறையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் சுமார் 4 மணி முதல் மீன்களை கரைக்கு கொண்டு வருவார்கள். அதனை ஏலம் விடும் மையத்தில் கொடுத்து ஏலம் விடப்படும்.

இதுபோன்று அதிகாலையில் ஏலம் விடும் மீன்களை பெரும்பாலும் ஓட்டல்களை சேர்ந்தவர்களே வாங்கி செல்வார்கள். இதனால், அப்போது கடும் கிராக்கி இருக்கும். இந்த ஏல விற்பனை காலை சுமார் 8 மணி வரை நடக்கும். அதன் பின்னர், வீடுகளுக்கு தேவையானவர்கள், வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். அதிகாலை இருளில் தொடங்கும் மீன் வியாபாரம், மதியம் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

தற்போது கட்டப்பட்டுள்ள இந்த புதிய மீன் ஏல கட்டிடத்தில் மின்சாரம், தண்ணீர் உள்பட எந்த வசதியும் இல்லாமல் உள்ளது. மேலும், மீன்களை பிடித்து வரும் மீனவர்கள், கரையோரத்தில் வைத்து ஏலம் விடுகிறார்கள். ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள கூடம் சிறிது தூரத்தில் உள்ளது.

fishermen shocked about fishing port

இதனால், மீனவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், மட்டுமே ஏலக் கூடத்தை பயன்படுத்துவோம் என கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக் கூடத்தை மீனவர்கள் பயன்படுத்த வேண்டாம் என தடை உத்தரவும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது, திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், காசிமேடு மீன் ஏலக்கூடம் விவகாரத்தில் சிலரின் சுயலாபத்துக்கு அரசு அடிபணியாது என கூறியுள்ளார். மேலும், புதிய மீன் ஏலக் கூடத்தை மீனவர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயகுமாரின் தொகுதி ராயபுரம். காலம் காலமாக வாழ்ந்து வருபவர். மீனவர்களின் பிரச்சனைகளை அதிகளவு அறிந்தவர். இதனாலேயே ஜெயலலிதாவின் ஆட்சியின் போதும் கூட அவர் மீன் வளத்துறை அமைச்சராக இருந்தார்.

ஆனால், தற்போது உள்ள பிரச்சனை குறித்து, மீனவ மக்கள் பலமுறை, அமைச்சர் ஜெயகுமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதை மறந்ததை போலவே, இன்று சட்டமன்றத்தில் அவர், மீனவர்கள் எதற்காக மீன் ஏலம் விடும் கூடத்தை பயன்படுத்த தயங்குகின்றனர் என தெரியவில்லை என்று கூறியது, மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios