எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேரையும் இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 39 பேர், தூத்துக்குடி, பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் ஆகிய 51 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்யது சிறையில் அடைத்திருந்தது. இவர்களை விடுதலை செய்யுமாறு கடந்த 2-ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, 51 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதனை அடுத்து, இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 39 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோன்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.