fishermen protest withdrawn temprorily
நாகையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஷ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 138 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
அப்போது மீனவர் பிரச்சனை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து நாகையில் கடந்த 5 நாட்களாக இரவும் பகலும் நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மார்ச் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
