Fishermans attention to grips the need to cancel the order issued to the individual to catch fish ...
ஈரோடு
அணை மற்றும் ஏரிகளில் மீன் பிடிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு அந்தியூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்தினருடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிச்சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, வேம்பத்தி ஏரி, சந்தியபாளையம் ஏரி ஆகியவை உள்ளன.
வரட்டுப்பள்ளம் அணை மற்றும் இந்த ஏரிகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். இதனை நம்பி ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் நடத்தி வருகின்றனர். இதற்காக அந்தியூரில் மீனவர்கள் கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பாதி எடை அளவை மீனவர்கள், மீன் வளத்துறைக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
மீன் வளத்துறைக்கு வழங்கப்படும் மீன்கள் அனைத்தும் டோக்கன் முறையில் அணை மற்றும் ஏரி பகுதியிலேயே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வறட்சி காரணமாக ஏரிகளில் தண்ணீர் இல்லை. ஆனால், வரட்டுப்பள்ளம் அணையில் குறைந்த அளவிலான தண்ணீரே உள்ளதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூரில் உள்ள அணை மற்றும் ஏரி பகுதிகளில் உள்ள மீன்களை பிடிக்க தனியாருக்கு ஏலம் விட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு அந்தியூர் மீனவர்கள் கூட்டுறவு சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அணை மற்றும் ஏரிகளில் உள்ள மீன்களை பிடிக்க தனியாருக்கு அனுமதி வழங்கினால், இந்த தொழிலை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும்.
எனவே, அணை மற்றும் ஏரிகளில் மீன் பிடிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு அந்தியூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கை வலியுறுத்தி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே மீனவர்கள் கூட்டுறவு சங்கதைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் குடும்பத்தினருடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் ஏ.ஜி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மீனவர்கள், “அணை, ஏரிகளில் மீன் பிடிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மீனவர்கள் கூட்டுறவு சங்கத்துக்கே அந்த உரிமையை மீண்டும் தர வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களாய் எழுப்பினர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.
