Fisherman killed by government bus hit fired the bus and the attacked the police
இராமநாதபுரம்
தங்கச்சிமடத்தில் அரசு பேருந்து மோதி மீனவர் பலியானதால் 400-க்கும் மேற்பட்டோர் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்தும், ஒரு பேருந்துக்கு தீ வைத்தும், போலீஸ் மீது கல் வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸ் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அரசு பேருந்து மோதி மீனவர் ஜெகன் என்பவர் உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த 400–க்கும் மேற்பட்ட மக்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள், அந்த வழியாக வந்த சில அரசு பேருந்துகள் மீது கல் வீசியதோடு, ஓட்டுநர்களையும் பலமாகத் தாக்கினர். மேலும் சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த காவலாளர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்தனர்.
இந்தச் சம்பவங்களை வருவாய் ஆய்வாளர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரும் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளானார்.
மேலும், சிலர் காவலாளர்கள் மீது கல் வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவலாளர்கள் தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக 11 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
