மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பரவிய காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளை வளைதள வாசி ஒருவர் கடந்த 27 ஆம் தேதியே முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்தும் 27 பேர் சென்னையில் இருந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் 11 பேர் இன்று வரை உயிரிழந்துள்ளனர். 

மேலும் பலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உரிய அனுமதி வாங்காமல் டிரெக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. 

இந்நிலையில், டிரெக்கிங் ஏற்பாடு செய்த பீட்டர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

அதாவது, குரங்கணியில் உரிய அனுமதி பெற்றுதான் டிரெக்கிங் சென்றோம் எனவும் அப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே காட்டுத்தீ திடீரென பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வளைதளவாசி ஒருவர் தனது முகநூலில் கடந்த 27 ஆம் தேதியே மலை உச்சியில் தீ பரவியதை புகைப்படத்துடன் பதிவிட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.