திருபெரும்புதூர் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலகத்தில் இருந்த கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகின.

திருபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த கணினி, ஆவணங்கள் தீ பிடித்து எரிந்தன. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த இரவு காவலாளி இதுகுறித்து திருபெரும்புதூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இருப்பினும் அங்கிருந்த 8 கணினிகள், ஒரு லேப்டாப், 3 பிரிண்டர்கள், ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகின.

இதுகுறித்து வட்டாட்சியர் தாமோதரன் கூறுகையில், "மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். வாக்காளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவை அனைத்தையும் மீண்டும் பெறமுடியும்' என்றார்.